search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவரம் பஸ் நிலையம்"

    • மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
    • மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முறையாக பயன்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

    சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் மேம்பாலம் அருகில் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ரூ. 93 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தான் ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பயணிகள் மத்தியில் முழுமையான வரவேற்பு இல்லை.

    மாதவரம் பஸ் நிலையம் திறக்கப்பட்டபோது கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து துறைக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. நாள் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏற்கனவே இருந்தது போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் திருப்பதிக்கு பஸ்களை இயக்கினார்கள்.

    மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாதவரம் பேருந்து நிலையத்துக்கு ஒவ்வொரு நாளும் வார இறுதி நாட்களில் 6500 பேர் வரை வந்து செல்கிறார்கள். மற்ற நாட்களில் 6 ஆயிரம் பேர் வரை வருகை தருகிறார்கள். ஆனால் மாதவரம் பேருந்து நிலையத்தில் தினமும் 12,500 பேர் வரை வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் முறையான திட்டமிடல் இல்லாததால் பயணிகளின் வருகை இந்த பேருந்து நிலையத்தில் மிகவும் குறைவாகவே காணப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தென்சென்னை பகுதிகளுக்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. திருவான்மியூர், அடையாறு, தரமணி, பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து முறையான பஸ் வசதி இல்லை என்பது பயணிகளின் நீண்டநாள் குறையாகவே உள்ளது. இதேபோன்று கிழக்கு சென்னை பகுதிகளுக்கும் போதிய பஸ் வசதி இல்லாமலேயே உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.

    செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் சிலவற்றை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கலாமா? என்று யோசனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் செங்குன்றம் பகுதியில் இருந்து அதிகம் பேர் பயணிப்பதை கருத்தில்கொண்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கூடுதல் பஸ் சேவையை அதிகரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முறையாக பயன்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். திருப்பதிக்கு செல்லும் தென் சென்னைவாசிகள் மற்றும் சென்னை கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் யாரும் மாதவரம் பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து திருப்பதி செல்வதற்கு விரும்புவதில்லை. அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே திருப்பதிக்கு செல்ல விரும்புகிறார்கள். இதற்கு காரணம் முறையான மாநகர பஸ் வசதிகள் இல்லாததே என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதன் காரணமாக மாதவரம் பஸ் நிலையத்தில் இறங்கி வீடுகளுக்கு கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்ல நேரிடுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே இனிவரும் காலங்களில் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் முறையாக மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பயணிகளின் இதுபோன்ற கோரிக்கையை பரிசீலித்து மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்படுத்தினால் அதன் மூலமாக வருவாய் அதிகரிப்பதுடன் கோயம்பேட்டில் இருப்பது போன்று மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் வாடகைக்கு கடைகளை அமைத்து கொடுத்து அதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் 60 பஸ்களும் தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது.
    • ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாதவரத்தில் இருந்து 140 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக-ஆந்திர மாநிலத்திற்கு இடையே பஸ் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திருப்பதிக்கு பஸ்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.

    ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் 60 பஸ்களும் தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. அதேபோல் ஆரம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு மாதவரத்திற்கு திரும்பி வருகிறது. ஆந்திர மாநிலத்திற்குள் செல்லவில்லை.

    ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாதவரத்தில் இருந்து 140 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பஸ் நிலையத்திலும் ஆந்திர மாநிலத்திலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    இரு மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாதவரம் பஸ் நிலையத்தில் திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி செல்லக்கூடிய பயணிகள் பஸ்கள் ஓடாததால் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், "ஆந்திரா மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால் மாதவரத்தில் இருந்து ஆரம்பாக்கம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கு நிலைமை சீராகும் வரை இதே நிலை நீடிக்கும்" என்றார்

    • கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    • போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்குள் நுழையாமல் ஜி.என்.டி. சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து செல்லும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் இருப்பதை அறிந்தார்.

    இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், அண்ணாமலை சேரி, தேர்வாய், கல்லூர், பிளேஸ்பாளையம், சத்தியவேடு, புத்தூர், மையூர், முக்கரம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நாளை (4-ந் தேதி) முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    • பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க வேண்டும்.
    • பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி. அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மாதவரம் பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

    அவருடன் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், அன்சுல்மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர், லட்சுமி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப்பேருந்து நிலையம் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் மேலும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் அமைச்சர் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.

    வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் இப்பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க வேண்டும்.

    மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

    பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி. அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

    ×